MADURAI PRE SCHOOL'S WELFARE ASSOCIATION

சங்கத்தின் துணைவிதிகள் : By Laws

குறிப்பு: 'சங்கம்' என்ற சொல் MADURAI PRE SCHOOL'S WELFARE ASSOCIATION என்பதை குறிக்கும்.

  • 1. சங்கத்தின் பெயர்: MADURAI PRE SCHOOL'S WELFARE ASSOCIATION
  • 2. சங்க பதிவு அலுவலகம்: மேரி கார்டன் No. 603.A மகாராஜா வளர்நகர், உத்தங்குடி அஞ்சல் மதுரை 625 107
  • 3. சங்கம் ஆரம்பித்த நாள்: 30.03.2016
  • 4. மாவட்ட பதிவாளர் வரம்பு: சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் மதுரை வடக்கு, மதுரை
  • 5. சங்கத்தின் அலுவல் நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
  • 6. சங்கத்தின் நிதி ஆண்டு: ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து தொடரும் ஆண்டின் மார்ச் 31-ம் தேதி வரை
பிரிவு 07

சங்கத்தின் நோக்கங்கள்

  1. மதுரை இளம் மழலையர் பள்ளிகளின் நலன் பாதுகாக்க கட்சி, மதம், மொழி சார்பற்ற சேவை அமைப்பாக செயல்படுதல்.
  2. மதுரை இளம் மழலையர் பள்ளிகளின் சட்டபூர்வ உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் நலன்களை பாதுகாக்க செயல்படுதல்.
  3. மதுரை இளம் மழலையர் பள்ளிகளின் மூலம் நாட்டுப்பற்று மனிதநேயம் தன்னலமற்ற பொதுசேவை ஆகிய மனப்பான்மைகளை வளர்க்க ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குதல்.
  4. மதுரை இளம் மழலையர் பள்ளிகளில் தேசியவிழாக்களான சுதந்திர தினம், குடியரசுதினம் மற்றும் தமிழர்தினமான பொங்கல் விழா போன்றவற்றை உரியதினங்களில் கொண்டாடி தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல்.
  5. மதுரை இளம் மழலையர் பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு சுமுகமான முறையில் தீர்வுகாண பாடுபடுதல்.
  6. மதுரை இளம் மழலையர் பள்ளிகளில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கவும் சிறப்பு மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
  7. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருக்கும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகளின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு குறைகள் மற்றும் தேவைகள் தீர நடவடிக்கை எடுத்தல்.
  8. மதுரை இளம் மழலையர் பள்ளிகளின் பெண் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலன் பாதுகாக்க குழு அமைத்து செயல்பட ஊக்குவித்தல்.
  9. மதுரை இளம் மழலையர் பள்ளிகளில் சங்க உறுப்பினர்களின் குறைகள் மற்றும் தேவைகளுக்காகவும் அனைத்து பள்ளிகளையும் பாதிக்ககூடிய பொதுவான நியாயமான பிரச்சனைகளுக்காகவும் மாவட்ட, மாநில அளவிலான ஒத்த நோக்கமுடைய மற்ற சங்கங்களுடன் இணைந்து செயல்படுதல்.
  10. மதுரை இளம் மழலையர் பள்ளிகளின் நலன்களை பாதுகாக்க தேவையானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல்.
  11. மதுரை இளம் மழலையர் பள்ளிகளில் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அரசியல் சார்பின்றி, லாபநோக்கமின்றி செயல்படுதல்.
பிரிவு 08

சங்கம் செயல்படும் முறை

அ. சங்க நிர்வாக எல்லை வரம்பு:

மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர், எல்லை வரம்பு தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும்.

ஆ. சங்க உறுப்பினர்கள்:

  1. மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் இளம்மழலையர் பள்ளிகள் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் சங்க உறுப்பினராக தகுதி உள்ளவர்கள்.
  2. உறுப்பினராக விரும்புவோர்கட்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  3. உறுப்பினராக விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவத்தை சங்கத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து நுழைவுக் கட்டணம் மற்றும் உறுப்பினர் கட்டணத்துடன் பொதுச்செயலாளரிடம் அளிக்க வேண்டும்.
  4. உறுப்பினராகச் சேர்ப்பது நிர்வாக குழுவின் தீர்மானத்தைப் பொறுத்ததாகும். பெரும்பான்மையான நிர்வாகக்குழு உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே சங்கத்தில் உறுப்பினராக முடியும். ஆண்டு சந்தாவாக ரூ.120/- (ரூபாய் நூற்று இருபது மட்டும்) உடன் செலுத்த வேண்டும்.
  5. உறுப்பினரின் ஆண்டு உரிமக் காலம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடரும் ஆண்டின் மார்ச் முப்பத்தி ஒன்று வரை தான். உறுப்பினர் உரிம காலாவதியாகி 60 நாட்களுக்குள் தங்களது ஆண்டு உறுப்பினர் உரிம கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக்கொள்ளாதவர் தாமாகவே உறுப்பினர் உரிமத்தை இழந்தவராகிவிடுவார்.
  6. உறுப்பினர்கள் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரவும், தீர்மானத்தின் மீது வாக்களிக்கவும், நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவும் நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், வாக்களிக்கவும் அவர்கள் தகுதியுடையவர்கள்.
  7. சங்கத்தின் நோக்கத்திற்கு மாறாகவோ, அல்லது சங்கத்தின் துணை விதிகட்கு மாறாகவோ அல்லது சங்கப் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ உறுப்பினர் செயல்பட்டால் அத்தகைய உறுப்பினருக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு கடிதம் அனுப்பி தகுந்த நிர்வாகக்குழு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்.

இ. உறுப்பினர் கட்டணம்:

சங்க உறுப்பினர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) ஆண்டு சந்தாவாக ரூ.120/- (ரூபாய் நூற்றி இருபது மட்டும்) செலுத்த வேண்டும். சந்தா தொகையில் மாற்றம் செய்ய 2/3 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஈ. சங்க அமைப்பு முறை:

இச்சங்கம் தனது கொள்கைகளையும், நோக்கங்களையும் செயல்படுத்த ஒரு பொதுக் குழுவையும் (GENERAL BODY) ஒரு செயற்குழுவையும் (EXECUTIVE COMMITTEE) ஒரு நிர்வாகக் குழுவையும் (ADMINISTRATIVE COUNCIL) கொண்டிருக்கும்.

உ. பொதுக்குழு (General Body):

சங்கத்தின் ஆண்டு உரிமைக் கட்டணம் கட்டிய அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்களாவார்கள்.

  1. பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தகவல் அறிய உரிமையுள்ளவர்கள்.
  2. சங்க விதிகட்குட்பட்டு, சங்கப் பதிவேடுகளை பார்வையிடவும், சங்கத்தின் அனைத்து பொதுக்குழுக் கூட்டங்களிலும் மற்ற செயல்பாடுகளிலும் கலந்து கொள்ள உரிமையுடையவர்கள்.
  3. சங்க செயற்குழு அனுமதி அளித்துள்ள நபர்களைகத் தவிர வேறுயாரும் சங்கம் சார்பாக எவ்வித தொடர்போ முறையீடோ, எந்த தனிநபரிடமும், அமைப்பினரிடமும் செய்யக் கூடாது.
  4. எந்த உறுப்பினராவது சங்கத்தின் நோக்கங்களுக்கும் தன்மைக்கும் விரோதமாக நடந்தாலோ அல்லது சமுதாய பொது நன்மைகளுக்கு எதிராகவோ, தேச விரோதமான செயல்களில் ஈடுபட்டலோ, சங்கத்தின் பொதுக் குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்.
  5. எந்த உறுப்பினராவது தகுந்த முன்னறிவிப்பு மற்றும் முன் அனுமதியின்றி தொடர்ந்தாற்போல் மூன்று பொதுக்குழுக் கூட்டங்களுக்கு வருகை தராமலிருந்தால் அந்த உறுப்பினர் தாமாகவே பொதுக்குழு உறுப்பினர் பதவி விலகியதாக கருதப்படுவார். இருப்பினும் அந்த உறுப்பினர் சங்கத்தின் பொதுக்குழுவிற்கு மேல் முறையீடு செய்தால் அதன் பேரில் சங்கத்தின் உறுப்பினராக அவர் தொடர்வது குறித்து பொதுக்குழு தீர்வு காணலாம்.

சட்டப்பிரிவு 15- ன் படி காட்டப்பட்டுள்ள அமைப்பும், பதவி காலமும், குழு உறுப்பினர்களின் தகுதியும் நியமன மற்றும் மறு நியமன முறையும்:

அ. இச்சங்கம் ஒரு பொதுக் குழுவையும் (General Body), ஒரு செயற்குழுவையும் (Executive Committee), ஒரு நிர்வாகக் குழுவையும் (Administrative Council) கொண்டிருக்கும்.

ஆ. பொதுக்குழு (General Body) அமைப்பு முறை: சங்கத்தின் ஆண்டு உரிமக் கட்டணம் செலுத்தியுள்ள அனைவரும் பொதுக்குழு (General Body Members) உறுப்பினர்கள் ஆவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.

இ. செயற்குழு (Executive Committee Members) அமைப்பு முறை: பொதுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர்கள், பொருளாளர், துணைப்பொருளாளர்கள், சங்க ஆலோசகர்கள் இவர்களோடு இணைந்து 10 செயற்குழு உறுப்பினர்கள் பொதுக் குழுவினரால் தேர்வு செய்யப்படுவர்.

நிர்வாகக்குழு (Administrative Council) அமைப்பு முறை:

  • பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் - 1
  • துணைத்தலைவர் - 5
  • பொதுச்செயலாளர் - 1
  • இணைச்செயலாளர் - 5
  • பொருளாளர் - 1
  • துணைப்பொருளாளர்கள் - 3
  • சங்க ஆலோசகர்கள் - 5
  • சட்ட ஆலோசகர்கள் - 1
  • செயற்குழு உறுப்பினர்கள் - 24
  • ஆக மொத்தம் 46 பேர்கள் உள்ளடங்கியதாக நிர்வாகக் குழு இருக்கும்.

நிர்வாகக் குழுவில் குறைந்த பட்சம் இரண்டு பெண் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். சங்கத்தின் நடப்பு ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை.

நிர்வாகக்குழு உறுப்பினர் பதவி காலம் மற்றும் பதவி விலகும் முறை:
சங்கத்தின் நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி முடிய குழு உறுப்பினர் பதவி வகிக்கலாம். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எவரேனும் பதவியிலிருந்து விலக விரும்பினால் தனது பதவி விலகல் விண்ணப்பத்தை பொதுச்செயலாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம். பொதுச்செயலாளர் அதனை அடுத்து வரும் கூட்டத்தில் வைத்து விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பின்னரே பதவி விலகல் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். உறுப்பினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவி விலக விரும்பினால் தலைவருக்கு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டும்.

பிரிவு 09

நிர்வாகக்குழு உறுப்பினர் பணிகள்

அ. தலைவர்:
பொதுக்குழு செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களுக்கு தலைமை ஏற்பார். சங்கத்தின் எல்லா செயல்பாடுகளுக்கும் தார்மீக பொறுப்பு ஏற்பார். சங்கக் கூட்டம் சுமூகமாக நடைபெற உதவுதல் முடிவு செய்யப்படவேண்டிய தீர்மானங்களில் உறுப்பினர்களிடையே சமவாக்கு இன்னொரு வாக்கையும் அளித்து சங்கத்தின் பொது நன்மையை கருதி நியாயமான முடிவு எடுக்க உதவ வேண்டும். தேவையானால் பொதுக்குழுவின் அனுமதியுடன் சங்கத்தின் நிதிகணக்குகளை பொருளாளருடன் இணைந்து செயல்படுத்துவார். தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பொறுப்பை ஏற்க முடியாத நேரத்தில் தற்காலிகமாக துணைத்தலைவர்கள் வசம் தனது பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கூட்டம் நடைபெறுகின்ற சமயங்களில் எந்த உறுப்பினராவது நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டாலோ கூட்டம் நடைபெறுவதற்கு இடையூறாக இருந்தாலோ அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்ற தலைவருக்கு அதிகாரமுண்டு.

ஆ. துணைத்தலைவர்:
தலைவர் இல்லாத நேரத்தில் தலைவரின் பணிகளை கவனிப்பார்கள். மற்ற சமயங்களில் தலைவரின் ஒப்புதலோடு அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்வார்கள்.

இ. பொதுச்செயலாளர்:
இவரே சங்கத்தின் முக்கிய முதன்மை நிர்வாகி. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். செயற்குழு மற்றும் பொதுக்குழு செயல்பாடுகளுக்கு பொறுப்பாவார். சங்கத்தின் அனைத்து தகவல் தொடர்பும் பொதுச் செயலாளர் மூலமே நடைபெற வேண்டும். சங்கத்தின் மூலம் சட்டபூர்வமாக வழக்கு தொடர்வதும் சங்கத்தின் மீது பிறர் வழக்கு தொடர்வதும் பொதுச் செயலாளர் பெயரிலேயே நடைபெற வேண்டும். தேவையானால் பொதுக்குழுவினார் ஒப்புதலுடன் பொருளாளருடன் இணைந்து சங்கத்தின் நிதிக் கணக்குகளை சரிபார்த்து பொருளாளருடன் இணைந்து, வரவு செலவு கணக்கு நோட்டிஸ் கையொப்பம் இட வேண்டும். சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் ஒப்புவித்து பொதுக்குழு அங்கீகரித்த பின் சம்பந்தப்பட்ட சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

ஈ. இணைச்செயலாளர்கள்:
பொதுச் செயலாளர் இல்லாத நேரத்தில் அவரின் அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். மற்ற சமயங்களில் பொதுச் செயலாளரின் பணிகளுக்கு உதவிகரமாக செயல்படுவார்கள்.

உ. பொருளாளர்:
சங்கத்தின் வரவு செலவு குறித்து எல்லா கணக்குகளையும் நிர்வகித்து வருவார். சங்கத்தின் நிதிக் கணக்குகளையும், வங்கி கணக்குகளையும் பொதுக்குழுவின் அனுமதியுடன் பொதுச் செயலாளருடனோ அல்லது தலைவருடனோ இணைந்து செயல்படுவார். சங்கத்திற்காக பெறப்படும் உறுப்பினர் சந்தா கட்டணம், நன்கொடை, மற்றும் முதலான அனைத்து நிதி வரவுகளுக்கும் முறையான ரசீது அளிப்பார். சங்கத்தின் அவசர செலவுகளுக்கு உதவுவதற்காக ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) தன் கைவசம் ரொக்கமாக வைத்துக் கொண்டு மற்ற தொகைகளை உடனுக்குடன் வங்கியில் செலுத்திட வேண்டும். ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் சங்கத்தின் வரவு செலவுக்கான நிதிநிலை அறிக்கையை அளிக்க வேண்டும். நிதியாண்டின் முடிவின் பொதுக்குழுவில் நியமனம் பெற்ற பட்டய தணிக்கையாளரிடம் தணிக்கை செய்யப்பட்ட சங்கத்தின் வரவு செலவுக்கான நிதிநிலை அறிக்கையை அளிக்க வேண்டும். இத்தகைய அறிக்கையானது பொதுக்குழு கூட்டத்திற்கு குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு முன்பே செயற்குழுவில் ஒப்புதல் பெற்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பிரதி மாதம் வரவு செலவு கணக்கிடப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிவு 10

பொதுக்குழுவைக் கூட்டுவதும் நடத்துவதும் பற்றிய முறைகள் (பிரிவு 20-ன்படி)

அ. ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்:

ஆண்டுக்கு ஓர் முறை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சங்க நிதியாண்டு முடிவடைந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். கூட்டத்தில் கீழ்க்கண்ட பொருள்கள் விவாதிக்கப்படும்:

  1. சங்கத்தின் ஆண்டு அறிக்கையின் மீது விவாதித்தல்.
  2. சென்ற நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மீது விவாதித்து அங்கீகரித்தல்.
  3. வரும் நிதியாண்டுக்கான வரவு- செலவு பற்றிய நிதி ஒதுக்கீடு குறித்து விவாதித்தல்.
  4. வரும் நிதியாண்டு கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் நியமனம் செய்தல்.
  5. பொதுக்குழுவில் உதவியோடு இதர தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.

ஆ. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்:

நிர்வாகக் குழு வேண்டும் போது சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூட்டலாம். சங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் என்ன நோக்கத்திற்காக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு கையொப்பமிட்டு, நிர்வாகக் குழுவிற்கு அனுப்பினால் விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நிர்வாகக்குழு சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அவ்வாறு நிர்வாகக்குழு சிறப்பு பொதுக்குழுவினை கூட்ட வில்லையென்றால், விண்ணப்பம் அளித்தவர்களோ அல்லது அவர்களில் ஒருவரை நியமனம் செய்து 21 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து அனைத்து உறுப்பினர்கட்கும் தகவல் அனுப்பி சிறப்பு பொதுக்குழுவை கூட்டலாம்.

இ. அனைத்துப் பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பும் கூட்டம் நடக்கும் நாட்களுக்கு 21 நாட்கள் முன்னதாக அனைத்து உறுப்பினர்கட்கும் அனுப்பி வைக்க வேண்டும். அறிவிப்பின் நகல் ஒன்றை சங்க அலுவலகத்தின் அறிவிப்புப்பலகையிலும் ஒட்டி வைக்க வேண்டும். கூட்ட அறிவிப்பில் கூட்டம் நடக்கும் தேதி, காலம், இடம் விவாதிக்கப்படும் பொருள்கள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

ஈ. Quorum (குறைந்த பட்ச எண்ணிக்கை): பொதுக்குழுக் கூட்டத்திற்கான சங்க உறுப்பினர்களின் குறைந்த பட்ச எண்ணிக்கை (Quorum) மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையாரும் கூட்ட நேரத்தின் போது பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வருகை தரவில்லையெனில் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு அடுத்த வாரம் அதே கிழமை, அதே இடம், அதே நேரத்தில் நடத்தப்படும் இதற்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு குறைந்தபட்ச எண்ணிக்கையும் தேவையில்லை.

பிரிவு 11 & 12

செயற்குழு & நிர்வாகக்குழு கூட்டங்கள்

11. செயற்குழு கூட்டம் (Executive Committee Meeting):

  1. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும். கூட்டத்திற்கான அறிவிப்பு மூன்று நாள் முன்னதாகவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். செயற்குழுக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 (ஏழு) உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முன்னிலையாகாத பட்சத்தில் 15 நிமிடங்களுக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்படும். இவ்வாறு, ஒத்திவைத்து நடத்தப்படும் கூட்டத்திற்கு உறுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட குறைவு எண்ணிக்கை அவசியமில்லை.
  2. கூட்டத்தில் சங்கத்தின் நடவடிக்கைகள் சென்ற கூட்ட நடவடிக்கைக்குப்பின் செயலரின் அறிக்கை வரவு- செலவு, நிதி நிலை அறிக்கை அங்கீகாரம் போன்ற பொருள்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

12. நிர்வாகக்குழு கூட்டம் (Administrative Council Meeting):

  1. மாதம் ஒரு முறை நிர்வாகக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
  2. செயற்குழுக் கூட்ட முடிவுகளின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், பொதுச்செயலாளர் அறிக்கை, நிதி நிலை மற்றும் செயற்குழு, பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தீர்மானங்கள், அறிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுத்தல். அந்த மாத வரவு செலவு குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
  3. ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆகியவை நடக்கும் தேதிகளை நிர்ணயித்தல், மேற்படி கூட்டத்திற்கான கூட்ட அறிவிப்பு, விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்து முடிவு எடுத்தல்.
பிரிவு 13

நிர்வாகிகள் தேர்தல் (Election of Office Bearers & Executive Committee Members)

பதவி ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். பதவி ஆண்டு முடிந்த நாளிலிருந்து 21 நாட்கள் முடிவதற்கு முன்பாக தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படவேண்டும். அதுவரை முன்பிருந்த நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்.

அ. தேர்தல் நடைமுறை:
நிர்வாகிகள் தேர்தலை நடத்த செயற்குழு ஒரு தேர்தல் ஆணையாளரை நியமிக்க வேண்டும். இவர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடாதவராக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர் நியமிக்கப்பட்டவுடன் அவர் தேர்தல் நடைபெறும் நாள், வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் போன்ற விபரங்களை உறுப்பினர்கட்கு துண்டுப்பிரசுரம் மூலமோ, பத்திரிக்கை விளம்பரம் மூலமோ தெரிவிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவோர், உரிய படிவத்தில் முன்மொழிதல், வழிமொழிதல் முதலியவற்றை பூர்த்தி செய்து வேட்பாளர் கையொப்பமிட்டு தேர்தல் ஆணையாளரிடம் அலுவலக நேரத்தில் நேரில் கொடுக்க வேண்டும். போட்டி ஏற்படுகின்ற பதவிகட்கு மட்டும் தேர்தல் ஆணையாளர் பொதுக்குழுவில் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிப்பார். நிர்வாகிகள் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் சங்கத்திற்கு ஆண்டு உரிமக் கட்டணம் (Subscription) செலுத்த வேண்டிய பாக்கியதாரர்களாக இருக்கக்கூடாது. தேர்தல் நடைமுறை பற்றிய இதர விதிமுறைகளை தேர்தல் ஆணையாளர் நிர்ணயிப்பார்.

பிரிவு 14, 15 & 16

நிதி, செலவுகள் & தணிக்கை

14. சங்கத்தின் நிதி மற்றும் வைப்பீடு (Funds and Deposits):

சங்கத்தின் நிதி ஆதாரங்களை செயற்குழு முடிவு எடுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலோ அல்லது அஞ்சலகத்திலோ கீழ்க்கண்ட வகையில் முதலீடு செய்யலாம்:

  • அ) சங்கத்தின் பெயரில் சேமிப்பு கணக்கு துவங்கி பராமரித்தல்.
  • ஆ) குறித்த கால வைப்புத் தொகை கணக்கில் முதலீடு செய்தல்.

மேற்படி வங்கி கணக்கினை தலைவர் மற்றும் பொருளாளரின் கூட்டுக் கையொப்பத்தின் பெயரில் இயக்கப்படும்.

15. சங்கத்தின் அன்றாட அலுவல் செலவுகள் மற்றும் பணியாளர் நியமனம்:

அ. சங்கத்தின் அன்றாட அலுவல் மற்றும் அவசர செலவுகட்காக பொருளாளர் ரூ.5000/- க்கு (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) மேற்படாமல் தன் கைவசம் வைத்து கொள்ளலாம். பொருளாளர் வசம் மேற்படி குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் பணத்தை வைத்திருத்தல் கூடாது.

ஆ. சங்கத்தின் பணிகளை கவனிக்க பணியாளர்கள் தேவைப்பட்டால், சங்கத்தில் உறுப்பினரல்லாத வெளிநபர்களை நிர்வாகக் குழு தேர்வு செய்து பணிக்கு நியமிக்கலாம். அவர்களின் பணி நிபந்தனை மற்றும் ஊதியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

16. சங்க கணக்குகளை ஆய்வு செய்யவும் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு மற்றும் தணிக்கையாளர் நியமனம் செய்தல் (பிரிவு 16-ன்படி):

சட்டப்பிரிவு 16 (1) ன்படி நிதிநிலை அறிக்கை தயார் செய்தல், நிதியாண்டு வரவு, செலவு, கணக்கு தணிக்கை செய்தல் ஆகிய பணிக்கு பட்டயத் தணிக்கையாளரை பொதுக்குழு நியமனம் செய்யும்.

பிரிவு 17, 18 & 20

ஆவணங்கள், அறிக்கைகள் & பதிவேடுகள்

17. ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் சங்கங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்தல்:

சங்கத்தின் நிதி ஆண்டு முடிந்தவுடன் சங்கத்தின் வரவு, செலவு கணக்கு, பொதுக்குழுவால் நியமிக்கப்பட்ட பட்டயத் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும். தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆண்டுப் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு சங்கங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் இனி குறிப்பிடப்படும் கீழ்கண்ட அறிக்கைகளை சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திற்குபின் இரண்டு மாத காலத்திற்குள் சங்கங்களின் பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டும்:

  • அ. தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட வரவு செலவு நிதிநிலை அறிக்கை.
  • ஆ. நிதியாண்டு முடிவில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை பெயர், முகவரி, தொழில் முதலியன குறித்த அறிக்கை (படிவம் 6.7).
  • இ. நிதியாண்டில் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதற்கான அறிக்கை.

18. சங்க விதிகளின் நகல் பெற கட்டணம்:

சங்க விதிகளின் நகல், வரவு, செலவு அறிக்கை நிதிநிலை அறிக்கை முதலியன உறுப்பினர்கட்கு வழங்குவதற்கு எந்த உறுப்பினரும் மேற்கண்ட நகல் கோரும் ஒவ்வொரு இனத்திற்கும் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

20. சங்கப்பதிவு அலுவலகத்தில் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள் (உறுப்பினர்கள் இலவசமாக பார்வையிட):

  • அ. உறுப்பினர் விபரத் தகவல் பற்றிய பதிவேடு
  • ஆ. கூட்ட நடவடிக்கை குறிப்புகள் அடங்கிய பதிவேடு
  • இ. தினசரி வரவு, செலவு மற்றும் அன்றைய நாளின் முடிவில் கையிருப்புத் தொகை விபரம் காட்டும் ரொக்கப்பதிவேடு
  • ஈ. எதிரிடையுடன் கூடிய ரசீதுப்புத்தகங்கள்
  • உ. செலவுகள் குறித்த ரசீது கோப்பு (வவுச்சர் பைல்)
  • ஊ. மொத்த வரவு செலவு குறித்த ஒருங்கிணைந்த தனிக்கணக்கு காட்டும் பேரேடு
  • எ. மாதாந்திர வரவு, செலவுப் பதிவேடு
பிரிவு 19, 21, 22, 23 & திருத்தங்கள்

பொது விதிகள், இணைத்தல் & திருத்தங்கள்

19. பிரிவு 2(ஒ)-ன்படி சிறப்புத் தீர்மானங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பொருள்கள் பற்றியது:
பொதுக்குழுவில் கலந்து கொண்டு வாக்கு அளிக்கக்கூடிய உரிமை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் நான்கில் மூன்று பங்குக்கு குறையாத பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் தீர்மானம் சிறப்பு தீர்மானம் எனப்படும்.

21. பிரிவு 25-ன்படி மரணம் அடையும் அல்லது ஊனமுற்ற உறுப்பினர்களைச் சார்ந்தவர்கட்கு உதவி செய்தல்:
மரணமடையும் அல்லது உடல் ஊனமுற்று சங்க உறுப்பினர்களை சார்ந்தவர்கட்கு தேவைப்பட்டால் பொதுக்குழுவின் ஒப்புதலோடு நிதி உதவி செய்யப்படும்.

22. சங்கத்தின் நிதிநிலையை பலப்படுத்துதல்:
சங்க நிதிநிலையை பலப்படுத்த ஒத்த கருத்துடைய நபர்கள், அமைப்புகள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெறலாம். பொதுக்குழு ஒப்புதலோடு வளர்ச்சி நிதிக்காக கலைநிகழ்ச்சிகள், இசைக்கச்சேரிகள், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

23. இணைத்தல், பிரித்தல் பற்றியது:
அ. சங்கப்பதிவாளருடைய முன் அனுமதியுடன் சங்கம் பொதுக்குழுவின் ஒரு சிறப்புத் தீர்மானம் மூலம் ஒத்த நோக்கங்கள் கொண்ட பிற சங்கத்துடன் அதன் நிதிநிலை பிரிக்கப்படாமலோ அல்லது சங்கம் கலைக்கப்படாமலோ இணையலாம்.
ஆ. சங்கம் பதிவாளருடைய முன் அனுமதியுடன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்களாகப் பிரியலாம். மேற்படி தீர்மானத்தில் பிரிவினை செய்ய உத்தேசித்துள்ள புது சங்கங்கட்கு சேர வேண்டிய சொத்து மற்றும் கடன் குறித்த உத்தேசங்கள் அடங்க வேண்டும். புதிய சங்கங்களின் எல்லை வரம்பு உறுப்பினர்களின் பெயர் விபரம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.
இ. மேற்கண்ட சங்க விதிமுறைகட்கு அப்பாற்பட்டு எதிர்பாரத சூழ்நிலையில் அவசரமாக ஏதேனும் முடிவு செய்ய வேண்டும் அல்லது தீர்வு செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும் பட்சத்தில் செயற்குழு கூடி தேவையான முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்துவார்கள். அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் அதை அறிவிப்பு செய்து அங்கீகாரம் பெற்றுக் கொள்வார்கள்.

திருத்தங்கள் (Amendments):

தீர்மானம் நிறைவேற்றிய நாள்: 09.05.2023

தலைமை தாங்கியவர்: திருமதி. நித்யா (Little flowers Kids Play school, Iyer Bungalow, Madurai)

தீர்மானத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பின்வருமாறு:

  • அ. சங்கத்தின் நிதிசார்ந்த காசோலைகளில் கையொப்பம் செய்யும் அதிகாரமானது பொருளாளர் மற்றும் தலைவர்/செயலாளர் ஆகியோர்களுக்கு மட்டுமே உண்டு.
  • ஆ. சங்க நிர்வாக உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அவர்கள் விலகும் பட்சத்தில் மற்றொரு உறுப்பினர் வாக்கெடுப்பின் அடிப்படையிலே தேர்வு செய்யப்படுவார்.
  • இ. சங்க முகவரியானது சொந்த உரிமையில் இருந்து வாடகையாக மாற்றப்பட்டது.
  • ஈ. சங்கத்தின் ஒரு குழு மட்டுமே சமூக வலைதளங்களில் ஈடுபட வேண்டும் என்பது கண்டிப்பானது.
  • உ. சங்கத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தும் வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.
  • ஊ. சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்:
    1. சங்கத்தின் அலுவல் சார்ந்த பணியில் குறைந்தது ஒரு வருட காலம் பணியாற்றியிருக்க வேண்டும். (அல்லது)
    2. குறைந்தது இரண்டு ஆண்டுகள் சங்க உறுப்பினராக இருந்திருத்தல் வேண்டும்.

சங்க விதிகள் தொடர்பான கேள்விகள் உள்ளதா?

சங்கத்தின் துணைவிதிகள் அல்லது நிர்வாகம் தொடர்பான சந்தேகங்களுக்கு எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.